நானே…

unnamed

“நானே…”

சற்றும் தயக்கமின்றி கடந்த இரண்டு நாளாக மழையால் மட்டம் போட்டு இன்று சுர்ர்ர்……. என்று சுட்டெரிக்கும் சூரியன் தோன்றியக் காலைப் பொழுது. அன்றைய இலக்கை துரத்துவதர்காக ஒவ்வொருவரும் தயாராகிக்கொண்டிருக்கும் பரபரப்பான நகரம்.

ஆவி பறக்கும் பில்டர் காபி — ஆஹா இந்த காப்பிக்கு தான் என்ன ஒரு மணம் காலை எழுந்ததும் மனிதனின் முதல் போதை இதுவே — இரண்டாம் பக்கச் செய்தி இதுவே என்று காற்றினால் முதல் பக்கம் பறக்கும் அன்றைய நாளிதழ் இவற்றின் பக்கத்தில் இறுக மூடிய கண்களுடன் கையில் உள்ள அலைப்பேசியின் லாக் பட்டனை அழுத்தி அமுத்தி பால்கனியில் அமர்ந்திருக்கக் காலை வேளையை வரவேற்றான் சுதிர். ஒவ்வொரு முறை அலைபேசியை ஆன் ஆப் செய்யும் போதும் அதன் டிஸ்ப்ளேயில் திசம்பர் 14, 7.05 A.M. என்று வந்து வந்து சென்றது. மனிதர்கள் சில நேரங்களில் தன் முன் எவ்வளவு அழகானக் காட்சிகள் இருந்தாலும் அதை ரசிப்பதை விடுத்தது எதோ ஒரு சோகக் காட்சியினால் ஆளபட்டிருப்பார்கள் அப்படியொரு நிலையில் தான் இருந்தது சுதிரின் மனநிலை.

5 நிமிடம் அப்படியே செல்ல சுதிரின் மனநிலையில் ஒரு மாற்றம் மக்களின் சலசலப்புக் குரல்கள் அவன் காதோரம் விழுந்து அவனை நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்தது என்ன என்று எழுந்து பால்கனியில் இருந்து சற்று எக்கி பார்த்தான் அவன் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருக்கும் ரேஷ்மாவின் வீட்டின் முன் தான் அந்த சலசலப்பு தனக்கு தெரிந்த பெண் தான் அந்த ரேஷ்மா என்பதால் என்ன விஷயம் என்று அறிந்துக்கொள்ளும் ஆவல் அதிகமாகியது.

தன் வீட்டிலிருந்து வந்து ரேஷ்மாவின் வீட்டை நெருங்கும்போது “படுபாவி எப்புடி செஞ்சிருக்கான் பாரு”, “நல்லாவே இருக்க மாட்டன்”, “ஜனங்களுக்கு பாதுகாப்பே இல்லாம போச்சு” போன்றவைத் விம்மிய குரலோடுக் கேட்க மனதினுள் பயம் கலந்த ஆர்வம் உருவானது. கூட்டத்தின் இருத் தோள்களை விளக்கி முன்னேற இரு காக்கிகள் தென்பட்டன. “என்ன ஆச்சு” என்று பக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணிடம் கேட்டான். “இந்த வீட்ல காலேஜ் படிக்கறப் பொண்ண யாரோ படுபாவிக் கொலைப் பண்ணிட்டாங்களாம்பா… பாவம்” என்று சொல்ல சுதிரின் உடம்பில் வியர்வை துளிகள் ஊற்றெடுக்க ஆரம்பித்தன.

இரு காக்கிகளில் ஒன்று ரேஷ்மா வீட்டின் எதிரில் இஸ்த்ரிக் கடை வைதிருப்பவரிடம் “நேத்து நைட் யார் யாரெல்லாம் இந்த வீட்டுக்கு வந்தா சந்தேகப்படும்படியா யாரவது வந்தங்களா” என்று மிரட்டும் தொனியில் வினவ “சந்தேகப் படும்படி யாரும் வரல சார், இரண்டு வீடு தள்ளி இருக்கும் பத்திரிக்கைக் காரத் தம்பி தான் நைட் ஒரு 9 மணிக்கு வந்துது வேற யாரும் வரல சார்” என்று பணிவாகக் கூறினார் இஸ்திரிப் பெட்டிகாரர். “9 மணிக்கா? எப்பயுமே வருவானா?” சந்தேகத்துடன் காக்கி “இல்ல சார் எப்பயாவது தான் சார் அது நல்ல தம்பி சார்” என்று இஸ்திரி முடிக்க காக்கியின் பார்வை சுதிரின் வீட்டுப்பக்கம். இவ்வளவையும் கூட்டத்தோடு நின்று கவனித்துக் கொண்டிருந்த சுதிரின் கைகள் நடுங்க ஆரம்பித்து விட்டன. “யோவ், ஆறுமுகம் அந்த வீட்ல ப்ரெஸ்ல வேலை செய்றப் பையன் இருக்கானாம் அவனப்போய் கூட்டிவா” என்று இவ்வளவு நேரம் விசாரித்த இன்ஸ்பெக்டர் நெல்சன்க் கூற ஹெட் கான்ஸ்டேபல் ஆறுமுகம் சுதிரின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அப்பொழுது கூட்டத்தில் ஒருவன் பதறி அடித்து ஓட அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறான். “சார், அவன்தான் சார் நான் சொன்ன தம்பி” என்று இஸ்திரிக் கடைக்காரர் பதற காக்கிகள் இருவரும் சுதிரைத் துரத்த ஆரம்பிக்கிறார்கள்.

கடன்கார முதலாளியின் மீன்க் கொத்தி பீரைக் தொடர்ந்துக் குடித்ததனால் உருவாகிய வயிற்றின் வீக்கத்தை வைத்துக் கொண்டு ஓடமுடியாமல் இரண்டாவதுத் தெருவில் இன்ஸ்பெக்டர் நெல்சனின் கையில் அகப்பட்டன் சுதிர். அகப்பட்டப் பின்னரும் திமிறிய உடம்பை பளார் பளார் என்ற வைத்தியத்தால் குணப்படுத்தி காவல் நிலையம் அழைத்து சென்றார் நெல்சன்.

“என்னயா… ஏதாது வாய தொரந்தானா?” என்றுக் கேட்டுக்கொண்டே சுதிர் இருக்கும் செல்லுக்குச் சென்றார் நெல்சன். “இல்ல சார் பொணந்தின்னி வாயே தொறக்க மாட்றான் சார்” எனக் கூறி நெல்சனின் பின் சென்று நின்றார் ஆறுமுகம். சில நிமிட கும்மாகுத்துக்களுக்கு பிறகு “சொல்லிடறேன் சார்” என பணிந்தான் சுதிர்.

நெல்சன் : “சொல்லு எதுக்கு எங்கள பாத்து ஒடன? அந்த பொண்ணு வீட்டுக்கு நைட் 9 மணிக்கு எதுக்குப் போன ?”

சுதிர் : “சார் அது வந்து….”

நெல்சன் : “ம்ம்ம்ம் “ (மிரட்டும் தொனியில்)

சுதிர் : “நான் செஞ்ச கொலை”கள” கண்டுபிடிச்சிட போறீங்கன்னு தான் சார் பயந்து ஒடன”

இன்ஸ்பெக்டர் நெல்சனும் கான்ஸ்டேபல் ஆறுமுகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் சற்றுக் குழப்பத்துடன்

நெல்சன் : கொலைகளா எத்தினி கொலைப் பண்ண?

சுதிர் : 4 கொலைங்க சார்

நெல்சன் : நாலா? என்ன ஒளர்ற ? யார் யார ?

சுதிர் : அண்ணா நகர்ல நிஷா , பாம்பேல அப்சர , காஞ்சிபுரம் சுவாதி , அப்புறம் கடைசியா ரேஷ்மா

நெல்சனுக்கும், ஆறுமுகத்துக்கும் பகீர் என்று ஆனது

நெல்சன் : எல்லாமே பொண்ணா ? டேய் நீ என்ன ரேபிஸ்ட்டா இல்ல சைகோவா ? உண்மையாதான் சொல்றியா இல்ல கத விட்றியா எப்டிக் கொலைப் பண்ண ?

சுதிர் ஒவ்வொருக் கொலையையும் விவரிக்க ஆறுமுகம் அனைத்தையும் எழுதிக் கொண்டே வந்தார். இன்ஸ்பெக்டர் நெல்சன் சுதிரின் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டே அவன் சொன்னதைக் காதில் வாங்கினார். அவன் சொல்லும் ஒவ்வொருக் கொலையின் பயங்கரத்தையும்க் கேட்க சற்று திடுக்கிட்டுப் போனார்கள் இருவரும்.

அவன் முதல் மூன்றுக் கொலைகளைப் பற்றி சொல்லி முடித்ததும் பெருமூச்சு விட்ட நெல்சன் “சரி நாலாவதா கொலைப் பண்ண ரேஷ்மா?” என்றுக் கேட்க “சார் கமிஷ்னர் ஆபீஸ்லேர்ந்து போன்” என்றுக் குரல் கேட்டதால் எழுந்து வெளியே வந்தார். கான்ஸ்டேபல் ஆறுமுகமும் கையில் இருந்த பேப்பர் பேடையும் பேனாவையும் உள்ளேயே வைத்துவிட்டு கொடூரக்கொலைகளால் மிரட்சியான தன் உடம்பை தண்ணீர் அருந்தி ஆசுவாசப்படுத்த வெளியே வந்தார்.

ஒரு சில நிமிடங்களில் “அய்யோ சார் சீக்கிரம் வாங்க” என ஆறுமுகம் கத்த இன்ஸ்பெக்டர் நெல்சனும் மேலும் 3 கான்ஸ்டேபல்களும் செல்லினுள் விரைந்தனர். தரையில் மயக்க நிலையில் இருந்த சுதிரின் கழுத்தில் இருந்து ரத்தம் தரையை சிவப்பாக்க பீரிட்டது. கான்ஸ்டேபல் ஆறுமுகம் வைத்து சென்ற பேனா சுதிரின் கையில் இருக்க அதன் நிப்பின் முனையில் சுதிரின் இரத்தத் துளிகள். “யோவ் இவ்ளோ கேர்லஸ்ஸா வா இருப்ப” என்று ஆறுமுகத்தை கடிந்த நெல்சன் “தூக்குங்க யா…” என மற்ற காக்கிகளுக்கு உத்தரவுப் போட ஜி.எச்.க்கு விரைந்தது காவல் துறை வாகனம்.

“இன்னும் இரண்டு சென்டிமீட்டர் ஆழமா இறங்கிருந்த ஸ்பாட்லியே இறந்திருப்பாறு… தேங்க் காட்!” இப்ப உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல ஈவ்வனிங்குள்ள கண் முழுச்சிடுவாறு” என அனுபவத்தால் கேள்வி ஏதும் கேட்கவிடாமல் அனைத்தையும் விளக்கிவிட்டு நகர்ந்தார் டாக்டர்.

“சார், நல்ல வேலையாத் தப்பிச்சோம் சார்” என்று கைக்குட்டையால் நெற்றியில் முத்திட்ட வியர்வையைத் துடைத்த கான்ஸ்டேபல் ஆறுமுகத்தை அதிகார தொனியில் ஒரு பார்வைப் பார்த்தார் நெல்சன்.

“சாரி சார், என்னோட மிஸ்டேக் தான்” என்றார் ஆறுமுகம்

“சார் இவன் எதோ கத விட்றானு நினைக்றேன் சார் அடிச்சதுல பயந்து எதோ ஒளறி இருக்கான். எப்டி சார் இவன் போய் 4 பொண்ண அதுவும் இவ்ளோ நாள் மாட்டாம இதல பாம்பே ல வேற ஒரு கொலையாம் எதோ ரீல் சுத்திட்டு கண்டுபிடிச்சிடுவோம்னு சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிருப்பான் சார்” என்று ஆறுமுகம் முடிக்க.

“யாரையும் அவ்ளோ லேஸ்ல எடப் போட்றாதீங்க ஆறுமுகம். அவன் சொன்னது எல்லாமே உண்மையா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு அவன் கொலையப் பத்தி விவரிக்கும் பொழுது அவனோட கண் விழி ரைட் சைட்ல தான் போச்சு. சோ… எதுவுமே அந்த நேரத்துக்காக சொன்னதில்ல எல்லாமே நடந்த விஷயத்த ஞாபகபடுத்தி சொன்னதா தான் இருக்கும் ஜஸ்ட் அ சைக்கலாஜிகல் கெஸ் (just a psychological guess)”, என்று நெல்சன் முடிக்க.

ஆறுமுகம் அதற்கு “சைக்கலாஜிய… ? அது சரி அதலாம் தெரிஞ்சிருந்தா நா உங்க எடத்துல இருந்திருப்பனே”, என முணுமுணுத்தார்.

“போதும் யா…. இதல என்ன ஒன்னு இடிக்குதுன்னா நாலாவதுக் கொலையப் பத்தி வாயே தெறக்கல அத பத்தி சொல்லக் கூடாதுன்னு தான் சூசைட் அட்டெம்ப்ட் செஞ்சிருக்கான் அவன் சொன்னதெல்லாம் உண்மையா இருந்துதுன்னா கண்டிப்பா அவன் வாய்லேர்ந்து நாலாவதுக் கொலையப் பத்திய உண்மைய வாங்க முடியாது. ஓ.கே. நீ போய் அவன் சொன்னக் கொலைலாம் உண்மையாவே நடந்துதா எவிடன்சு ஏதாது இருக்கான்னு உடனே விசாரிச்சி ரிப்போர்ட்க் கொடு நான் கமிஸ்னர் ஆபிஸ் வரப் போயிட்டு வரேன். அப்படியே 2 கன்ஸ்டேபல விட்டு அவனப் பத்தியும் அவன் வீட்டையும் செக் பண்ண சொல்லு”, என்று மருத்துவமனையை விட்டு சென்றார் நெல்சன்.

இரவு ஏழு மணியளவில் கன்ஸ்டேபல் ஆறுமுகம் இன்ஸ்பெக்டர் நெல்சனுக்குப் போன் செய்து “சார் எல்லா ஸ்டேஷன்லயும் விசாரிச்சாச்சு எல்லாமே உண்மை தான்“, என்று சொல்ல காவல் நிலையத்துக்கு விரைந்தார் நெல்சன்.

காவல் நிலையம் வந்த நெல்சனிடம் “சார் எல்லாமே உண்மை தான் சார் அவன் சொன்னதுலேர்ந்து மயிரிழைக் கூட மாறாம அப்படியே எப்.ஐ.ஆர்.ல பதிவு செஞ்சிருக்காங்க ஆனா யாரையும் இது வர கன்விக்ட் (குற்றவாளி) பன்ல. இதல என்ன ஒரு கோ-இன்சிடேன்ஸ்னா 3க் கொலைளயும் எவிடேன்சே இல்ல. இது இல்லாம ரேஷ்மாக் கொலைலயும் எவிடன்சு ஏதும் கிடைக்கல போஸ்ட் மோர்டோம் ரிப்போர்ட் நாளைக்கு வந்துறம் சார், பையனப் பத்தி விசாரிச்சதுல இந்த பேப்பர்ல சேர்ந்து நாலு வருஷம் தான் ஆகுது நல்ல படியாதான் சொல்றாங்க ஆனா ரொம்ப பயந்தவனாம்”, என்றார் ஆறுமுகம்.

“இன்னொரு விஷயம் என்னனா… கொலையான எல்லாருமே ரேஷ்மா தவிர, லவ் செஞ்சு பிரேச்சனா ஆகி வேற ஒருத்தரக் கல்யாணம் பண்ணவங்க” என்றார் ஆறுமுகம்.

நெல்சன் : “அந்தப் பொண்ணுங்களுக்கும் இவனுக்கும் என்ன லிங்க்? “என்னையா கேஸ் ரொம்ப கம்ப்ளிக்கேட்டடு ஆகுது…….?”

சில நிமிட மௌனங்களுக்குப் பிறகு

ஆறுமுகம் : “சார் அவனே ஒத்துக்கிட்டானே சார்…. கேஸ்ஸ க்ளோஸ்ப் பண்ணிடலாம் சார்….”

நெல்சன் : “நாலாவதுக் கொலைப் பத்தி எதுவும் சொல்லல இவன் தான் செஞ்சான்னு ஸ்ட்ராங் எவிடன்சே இல்லையே நாளக்கி கோர்ட் ல பல்டி அடிச்சிட்டானா… ? சரி அவன் வீட்ட நல்லா செக் பண்ணீங்கள வேற எதாவது இருந்துதா…?”

ஆறுமுகம் : “ஒரு கம்ப்யூட்டர் மட்டும் இருந்துருக்கு சார் ஆனா அது வேல செய்ல மெக்கானிக் விட்டு ரிப்பேர் செய்ய சொல்லிர்க்கேன் ரெடி ஆகிடுச்சின்னு போன் செஞ்சான் அது தான் கடைசியா இருக்குற ஆதாரம்”.

நெல்சனும் ஆறுமுகமும் சுதிரின் வீட்டுக்கு சென்று அவனின் கணிணியை ஆராய ஆரம்பிக்க் அமர்கிறார்கள் அருகில் கம்ப்யூட்டர் மெக்கானிக்கும் இருந்தார். “என்ன ரிப்பேர் யா” என நெல்சன் மெக்கானிக்கிடம் கேட்க “யு.பி.எஸ். ல சின்ன ப்ராப்ளம் அது இல்லாம சி-மோஸ் பேட்டரி (c-mos battery) போய்டுச்சு சார்” என்றார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க ஆறுமுகம் கணிணியை ஆராயந்தார்

இன்ஸ்பெக்டர் நெல்சன் : “எதுக்குய அந்த சி-மோஸ் பேட்டரி (c-mos battery)?”

கம்ப்யூட்டர் மெக்கானிக் : “சி – மோஸ் பேட்டரி போயிருந்தா ஒவ்வொருவாட்டி கம்ப்யூட்டர் ஸ்டார்ட் பண்ணும்போது டேட் மாறி மாறிக் காட்டும். ஆக்ட்டுவலி(actually) இன்னிக்கு தேதி 26 ஆனா இந்த கம்ப்யூட்டர்ல 21ன்னுக் காட்டும்”.

இன்ஸ்பெக்டர் நெல்சன் : “ஒ……”

சிறிது நேர ஆராய்ச்சிக்கு பின் சிலக் கம்ப்யூட்டர் பைலைக் கண்டுபிடித்த ஆறுமுகம் அதைத் திறந்துப் பார்த்தார் அதில் நடந்தக் கொலைகள் பற்றிய விவரங்கள் அச்சு பிசராமல் இருந்தது. கூடவே கொலைகளைப் பற்றிய செய்திகள் வந்திருந்த நாளிதழின் கட்டிங்க்ஸும் இருந்தது. “சார், இதுவே போதுமே அவன் ஒவ்வொருக் கொலையையும் செஞ்ச நாளும் கம்ப்யூட்டர்ல பதிவு செஞ்ச நாளும் ஒத்து போகுது சோ கொலையை செஞ்சிட்டு வந்து எப்படி செஞ்சான்னு பதிவு செஞ்சிருக்கிறான்” என ஆறுமுகம் ஆதாரம் கிடைத்த மகிழ்ச்சியில் நெல்சனிடம் கூற“, ஆனா இத ஏன் செஞ்சிருக்கனும் 3-க் கொலையை தைரியமா ஒத்துகிட்டவன் 4 வத பத்தி ஏன் வாய் திறக்கல என்றக் கேள்விகள் நெல்சனின் மனதில் ஓடியது.

பல நாட்கள் பல முறைகள் பல வழிகளை சுதிரிடம் கையாண்டாலும் வாய் திறக்காததால் இறுதியாக அவனிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டனர். முறையான அனுமதி பெற்று சுதிரிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தபட்டது.

டாக்டர் தேவானந்த் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தும் மருத்துவர் அவரிடம் சுதிரைப் பற்றிய அனைத்து விவரங்களும் அளிக்கப் பட்டன.

டாக்டர் தேவானந்த் சுதிரின் உடம்பினுள் மருந்தை செலுத்த அதன் வீரியத்தால் சுதிர் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கநிலையை அடைந்தான் அருகில் இன்ஸ்பெக்டர் நெல்சன் இருக்க டாக்டர் தேவானந்த் சுதிரை பற்றி ஒவ்வொருக் கேள்வியாக அவனிடம் கேட்க ஆரம்பித்தார். கேட்டதை சொல்லும் கிளிப் பிள்ளைப் போல ஒவ்வொருக் கேள்விகளுக்கும் சுதிர் தன்னை அறியாமல் பதில்களைக் கூற ஆரம்பித்தான்.

டாக்டர் : எதுக்காக 4 பெண்களக் கொலைப் பண்ணீங்க அவுங்களுக்கும் உங்களுக்கும் என்ன விரோதம் ?

சற்று நேர மௌனம் அந்த அறையை ஆக்கிரமித்தது

டாக்டர் : சுதிர்… கேட்டுச்சா… ? எதுக்காக 4 பெண்களக் கொலைப் பண்ணீங்க அவுங்களுக்கும் உங்களுக்கும் என்ன விரோதம் ?

சுதிர் : ஸ்வேதா…. ஸ்வேதா

டாக்டர் : “ஸ்வேதா… வா யார் அது அவுங்க உங்களுக்கு எப்டி பழக்கம்?”

சுதிர் : ——– “படிப்ப முடிச்ச உடனே பெங்களூர்ள இருக்குற ஒரு நியூஸ் பேப்பர் கம்பெனில வேலக் கெடச்சுது அங்க தான் ஸ்வேதாவ முதல் முறையா பார்த்தேன். கொஞ்ச நாள்ளையே நானும் ஸ்வேதாவும் க்ளோஸ் பிரெண்ட்ஸ் ஆனோம். நான் அப்பா அம்மா இல்லாம வளர்ந்ததாள கடல்ல தத்தளிக்கும் கப்பலுக்கு கரை கெடச்சது போல இருந்தது அந்த நட்பு. சீக்கிரமாவே அந்த நட்புக் காதலா மாறிச்சி. ரெண்டுப் பேரும் சின்சியரா காதலிச்சோம் இன்பாக்ட் நான் அவளோட அடிமையவே ஆனேன். அவ இல்லாம நான் இல்ல என்ற நிலைமைக்கு ஆள் ஆனேன். அடுத்தக் கட்டத்துக்கு எங்க காதல நகர்த்தும் பொழுது ஸ்வேதா தடம் மாற ஆரம்பிக்கிரான்னுக் கண்டுபிடிச்சேன். கடைசியா ஒரு நாள் ஒரு இன்விடேஷனோட வந்து பணத்தைக் காரணமாக் காட்டி நமக்குள்ள செட்டாகாது எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்ன்னு சொன்னா. அவகிட்டக் கால்ல விழுந்துக் கூடக் கெஞ்சிப் பார்த்தேன் ஆனா எதுவும் நடக்கல. ஸ்வேதாப் போன சோகத்துல தண்ணி அடிக்க ஆரம்பிச்சு வேலையல கான்சென்டேரெட் பண்ண முடியாம வேலையும் இழந்தேன். கடைசியா சேன்ஞ் வேணும்னு சென்னை வந்து இங்க வேலப் பார்க்க ஆரம்பிச்சேன். இங்க சென்னைல என்னப் பத்தி யாருக்குமே தெரியாது. சென்னை லைப் என்ன எவ்ளோ மாத்தனாலும் ஸ்வேதா வால உருவானக் காயம் ரணமாகவே இருந்துச்சு. அதுக்கு மருந்து காதலிச்சு ஏமாத்துறப் பொண்ணுங்கள பழிவாங்கணும்னு கொலைப் பண்ண ஆரம்பிச்சேன். அப்படி தான் அண்ணா நகர்ல நிஷா , பாம்பேல அப்சர , காஞ்சிபுரம் சுவாதி , அப்புறம் கடைசியா ரேஷ்மா”

என ஆரம்பித்துக் கொலை செய்த விதத்தைக் கூறினான் ஒவ்வொன்றாகச் சொல்லும்போதும் ஆமாம் என்ற தொனியில் தலையசைத்தார் இன்ஸ்பெக்டர் நெல்சன். மூன்றாவதுக் கொலையான சுவாதிக் கொலை பற்றிக் கூறியவுடன் “ரேஷ்மா, ரேஷ்மா” என்று அமைதியானான் சுதிர். (இவையனைத்தும் தொடர்ந்து அல்லாமல் மயக்கநிலையில் இருப்பதால் பகுதி பகுதியாக சொன்னான் சுதிர்)

டாக்டர் : சுதிர் ? சுதிர் ? என்னாச்சு ? நைட் 9 மணிக்கு ரேஷ்மா வீட்டுக்கு எதுக்கு போனீங்க ?

சற்று தழுதழுத்தக் குரலில்

சுதிர் : “ரேஷ்மா ரொம்ப பழக்கம் இல்ல….. ரெண்டு வீடு தள்ளி இருக்கா அவ ப்ராஜெக்ட்காக ஒரு புக் கேட்டன்னு கொடுக்க போனேன் அவல நல்லப் பொண்ணு தான் நெனச்சேன்…. ஆனா அவளும் என்னோட காதலி ஸ்வேதா போல யாரையோ ஏமாத்துரான்னு அவ பேசிட்டு இருந்த போன்லேர்ந்து தெரிஞ்சிது அவளையும் கொலைப் பண்ணனும்னு முடிவுப் செஞ்சேன்.

டாக்டர் : “கொலைப் பண்ணீங்களா?”

சுதிர் : “—————————————————-“ (மௌனம்)

டாக்டர் : “சுதிர் ? சுதிர் ?”

ஆனால் சுதிரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை

இன்ஸ்பெக்டர் நெல்சன் : “என்னாச்சு டாக்டர்?”

டாக்டர் : “அவர் மயக்கத்தோட எக்ஸ்ட்ரீம் போய்ட்டாரு இதுக்கு மேல எதுவும் கேட்க முடியாது அப்படிக் கேட்டா அவரு உயிருக்கே ஆபத்தா முடியும்.”

இன்ஸ்பெக்டர் நெல்சன் டாக்டரின் அறையில் குழப்பதொடு அமர்ந்திருந்தார் சிறிது நேரம் கழித்து வந்த டாக்டர் தேவானந்த் “என்ன நெல்சன் இன்னும் கொழப்பம் தீரலையா? எனகென்னவோ சுதிர் சொல்றதுலேர்ந்து அவன்தான் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தால பழிவாங்கிருக்கிறான்னுத் தோணுது”.

“எனக்கும் அப்டிதான் படுது ஆனாக் கொலை செய்யப்பட்டவங்களுக்கும் இவனுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இல்ல நல்லா விசாரிச்சாச்சு”, எனக் கூறினார் நெல்சன்.

டாக்டர் : “ஏன் இருக்காது பஸ்ல அந்தப் பொண்ணுங்க யார்க் கூடயாவது பேசியதப் கேட்ருக்கலாம் ஆர் எல்ஸ் இன் போன் (or else in phone).”

இன்ஸ்பெக்டர் நெல்சன் : “இருக்கலாம் ஆனா மும்பைல நடந்தக் கொலை ?”

டாக்டர் : “யோசிக்கவேண்டிய விஷயம் தான்”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் இன்ஸ்பெக்டர் நெல்சனுக்கு அலைப்பேசி வந்தது. அலைப்பேசியில் பேசி முடித்த நெல்சனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. அவரது அந்தக் களிப்பைப் பார்த்து

டாக்டர் : “என்ன நெல்சன் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க ப்ரொமோஷன் ஏதாது வந்துடுச்சா ?”

இன்ஸ்பெக்டர் நெல்சன் : “அட ப்ரொமோஷன்லாம் இல்ல டாக்டர் நான் இதுக்கு முன்னாடி வியாசர்பாடில இன்ஸ்பெக்டரா இருந்தேன். அங்க பாட்டில் மணின்னு ஒரு ரவுடி அந்த ஏரியால நடக்கற முக்காவாசி குற்றத்துக்கு அவன் தான் காரணம். என்கிட்டர்ந்து 2 வாட்டி என்கவுன்ட்டர்லேர்ந்து தப்பிச்சிட்டான் அவனோட அரசியல் செல்வாக்கால என்னையும் அங்கேர்ந்து ட்ரான்ஸ்பர் செஞ்சிட்டான். இப்ப புதுசா வந்த இன்ஸ்பெக்டர் அவன தூக்கிட்டுருக்காருன்னு போன் வந்தது. நான் செய்யனும்னு நெனச்சத வேற ஒருத்தர் செஞ்சிருக்காரு அத நானே செஞ்ச மாதிரி ஒரு பீலிங் மனசுக்குள்ள அந்த சந்தோஷம்தான்.”

டாக்டர் : கைண்ட் ஆப் போயடிக் ஜஸ்ட்டிஸ் (KIND OF POETIC JUSTICE)

என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்தார்கள்

டாக்டரின் சிரிப்பொலி காற்றில் சிறிது நேரம் கூட பரவாமல் எதோப் பொறி தட்டியதுப் போல “நெல்சன்… இதுவே சுதிர் விஷயத்தில ஏன் நடந்துர்க்க கூடாது?”

இன்ஸ்பெக்டர் நெல்சன் : “என்ன சொல்றீங்க டாக்டர் ?”

டாக்டர் : “காதலிச்சு ஏமாந்ததனால, அப்படி ஏமாத்தும் பெண்கள பழிவாங்கணும்னு இருக்க மனசு, அந்த டைம்ல ஆக்சிடென்டலா(accidental) இதே நோக்கத்தோட நடக்கும் கொலைகள தானே செஞ்சாத நம்பறது. அதாவது, தன்னோட பயத்தாளையும் இயலாமையாளையும் தன்னாலச் செய்ய இயலாத, ஆனா செய்யத் துடிக்கும் ஒரு விஷயத்த வேற யாரோ செஞ்சதால சந்தோசப் பட்ருக்கான். இது நார்மலா எல்லார்கிட்டயும் இருக்குற விஷயம் தான் ஆனா இவன் ஒரு ஸ்டேப் மேல போய் அத தானே செஞ்சாத நம்பிருக்கான், கொலைகள் நடந்த விதத்த நல்லா தெரிஞ்சு தன்னோட ஆழ்மனசுலேர்ந்து தானே செஞ்சாத நம்பிறுக்கான். ஹி கன்ஸிடர்ட் ஹிம்செல்ப் ஆச ஹீரோ(HE CONSIDERED HIMSELF AS A HERO). ரேஷ்மாவ கொலை பண்ணனும்னு மனசுல நெனச்ச உடனே, நீங்க அவன அரெஸ்ட் பண்ணதால ரேஷ்மாக் கொலை எப்படி நடந்ததுன்னு அவனால சொல்ல முடில. இன்பாக்ட் ரேஷ்மா தான் உயிரோடு இருக்கும்போதே இவன் கொல்லணும்னு நினச்ச முதல் பொண்ணு, மத்ததெல்லாம் இவன் செஞ்சாத நினச்சக் கற்பனையே”.

அப்பொழுது இன்ஸ்பெக்டர் நெல்சனின் மனதில் கம்ப்யூட்டர் மெக்கானிக் “சி-மோஸ் பேட்டரி போயிருந்தா ஒவ்வொருவாட்டி கம்ப்யூட்டர் ஸ்டார்ட் பண்ணும்போது டேட் மாறி மாறிக் காட்டும். ஆக்ட்டுவலி(actually) இன்னிக்கு தேதி 26 ஆனா இந்த கம்ப்யூட்டர்ல 21ன்னுக் காட்டுச்சு”, என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

“சோ… ஒவ்வொருக் கொலை நடந்தப் பின்னரும் அத பத்தி முழு விவரம் தெரிஞ்ச அஞ்சாவது நாள் தான் அதப் பதிவு செஞ்சிருக்கான். ப்ரெஸ்ல இருக்கவே கேஸ்ஸப் பத்திய நுனுக்கமான விஷயம் கூடத் தெரிஞ்சிருக்கு. ஆனா, அந்த வாய்ப்பு கடைசியா நடந்தக் கொலையில அவனுக்கு கெடைக்கல”, என்று முடிவுக்கு வந்தார்.

“டாக்டர் அப்போ ரேஷ்மாவக் கொலை செஞ்சது?” என்று இன்ஸ்பெக்டர் நெல்சன் வினவ “அத நீங்க தான் கண்டுபிடிக்கணும்”, என்றார் டாக்டர் தேவானந்த் நகைப்பாக.

அப்பொழுது நெல்சனின் அலைபேசி அலற அதை எடுத்துப் பேசியப்பின் டாக்டரைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்.

“என்ன நெல்சன் இப்ப என்ன மேட்டர் ?” என்ற டாக்டரிடம் “ரேஷ்மாவ அவன் மாமன் தான் எதோ கல்யாண தகராறில் கொலை செஞ்சிருக்கான் இப்பதான் சரண்டர் ஆயிருக்கான்”, என்றார் நெல்சன்.

அதைக் கேட்டதும் மகிழ்ச்சி அடைந்த டாக்டர் “ஹா… ஹா… ஹா… இட்ஸ் ஆல் மீயர் கோ-இன்சிடேன்ஸ் அண்ட் கைண்ட் ஆப் போயடிக் ஜஸ்ட்டிஸ் (IT’S ALL MERE CO-INCIDENCE AND A KIND OF POETIC JUSTICE)”, என முடித்தார்.

ஸ்ரீ

Advertisements

3 Comments Add yours

  1. Martian says:

    Hmm good story

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s